×

அக்னி நட்சத்திர பெருமாள்

இந்த ஆண்டு சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்று அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் ‘அக்னி நட்சத்திர காலம், வரும் 4.5.2023-ல் ஆரம்பித்து 29.5.2023-ல் முடிகிறது. இந்த வேளையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார் சமுத்திரத்தில் அருளும் கதிர் நரசிங்கப் பெருமாளை தரிசித்தால் சூரியன் தொடர்பான தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். திண்டுக்கல்லிலிருந்து வேட சந்தூர் செல்லும் பாதையில் சுமார் 15.கி.மீ. தொலைவில் ரெட்டியார் சமுத்திரம் இருக்கிறது. கோயில் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது.

ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாள் இருவருக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், எங்கு கோயில் அமைப்பது, எப்படி சிலை வடிப்பது என்ற குழப்பம் இருந்தது. ஒரு சமயம் சிவன், பெருமாள் இருவரும் அவரது கனவில் தோன்றி இத்தலத்தைக் காட்சி கொடுத்து கோயில் எழுப்பும்படி கூறினார். அங்கு மன்னர் சென்று பார்த்தபோது லிங்கம் ஒன்று அங்கே இருந்தது. எனவே பெருமாளுக்கு மட்டும் சிலை வடித்த மன்னர் லிங்கத்தின் அருகிலேயே பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார்.

பெருமாளுக்கு ‘நரசிங்கப் பெருமாள்’ என பெயர் சூட்டினார். காலப் போக்கில் பெருமாள் பிரசித்தி பெறவே, அவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்பெற்றது. இவருக்கு ‘கத்ரி நரசிம்மா’ என்ற பெயரும் உண்டு. ‘கதிர்’ என்பது சூரியனின் அதிகபட்ச ஒளியைக் குறிக்கும் பெயராகும். இத் தலத்து பெருமாள், சூரியன் தொடர்பான தோஷங்களை நீக்குபவராக அருளுவதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். ஜாதக ரீதியாக சூரிய தோஷம் உள்ளவர்கள், அக்னி நட்சத்திர காலத்தில் சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து வேண்டினால் சுபிட்சம் ஏற்படும்.

கருவறையில் மகா விஷ்ணு, ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். நரசிங்கப் பெருமாள் என்று அழைக்கப்பட்டாலும், நரசிம்ம முகம் கிடையாது. சாந்த மூர்த்தியாகவே உள்ளார். கருவறைக்கும் கோஷ்டச் சுவருக்கும் இடையே, மூலஸ்தானத்தை மட்டும் வலம் வரும் வகையில் உள் பிராகாரம் ஒன்றுள்ளது. இது மிகவும் புராதனமான கோயில்களில் மட்டுமே காணப்படும் அமைப்பாகும்.

முதலில் பெருமாளுக்கும் அடுத்து சிவனுக்கும் பூஜை செய்கிறார்கள். காலபைரவர் சந்நதியும் இருக்கிறது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. சுவாமிக்கு வலது புறம் கமலவல்லி தாயார் சந்நதி உல்ளது. குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற, இங்குள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். பிராகாரத்தில், ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்ட வீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இங்குள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர்.

பதினாறு, திருக்கரங்களுடன், அக்னி கிரீடம் அணிந்திருக்கும். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே லட்சுமி நரசிம்மரும் உள்ளனர். குழந்தைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்கும் முன்பு, இங்கு வந்து அர்ச்சனை செய்த பின்னரே செல்கிறார்கள்.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post அக்னி நட்சத்திர பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Mesha zodiac ,
× RELATED ஆலங்குடி, திட்டை, சூரியனார்...